articles

img

சீனாவில் முஸ்லிம்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனரா?

சீனாவின் பொருளாதார சவால்களை சந்திக்க இயலாத அமெரிக்கா சீனாவுக்கு நெருக்கடிகள் தர அனைத்து சூழ்ச்சிகளையும் கையாண்டு வருகிறது. அவற்றில் ஒன்று, ‘ஷின்ஜியாங் பகுதியில் உள்ள உய்கர் முஸ்லிம்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர்’ எனும் பொய் பிரச்சாரம் ஆகும். பி.பி.சி./ஐரோப்பிய/அமெரிக்க ஊடகங்கள் மிகப்பெரிய அளவுக்கு இந்த பிரச்சாரத்தை நடத்தி வருகின்றன. முஸ்லிம் மக்களிடையே இந்த பிரச்சாரம் கணிசமான தாக்கத்தை உருவாக்கியுள்ளது எனில் மிகை அல்ல. ஆனால் இந்த ஊடகங்களின் பிரச்சாரத்தில் உண்மை உள்ளதா?

சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஷின்ஜியாங் பகுதி சுமார் 16 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவு கொண் டது. இந்த பகுதியின் எல்லை கஜகஸ்தான்/ கிர்கிஸ்தான்/ தஜிகிஸ்தான்/ ஆப்கானிஸ்தான்/ பாகிஸ்தான் ஆகிய 5 இஸ்லாமிய நாடுகளையும் மங்கோலியா /ரஷ்யா/இந்தியா ஆகிய நாடுகளையும் தொட்டுச் செல்கிறது. ஷின்ஜியாங் பகுதியில் வாழும் ‘உய்கர்’ இன மக்கள் மட்டுமேசீனாவில் உள்ள முஸ்லிம்கள் அல்ல! சீனாவில் முஸ்லிம் களின் பல பிரிவினர் வாழ்கின்றனர். உதாரணத்துக்கு 2 கோடி எண்ணிக்கையிலான ஹுஹி எனும் பிரிவினர்தான் சீனாவில் வாழும் அதிக எண்ணிக்கையிலான முஸ்லிம்கள். மேலும் கஜக்/தஜிக்/டாட்டர்/ உஸ்பெக்/சலார் எனப்படும் பல்வேறுமுஸ்லிம் பிரிவினரும் வாழ்கின்றனர். இவர்களில் எவருக்கும் சீன அரசுடன் பிரச்சனை கிடையாது. அமைதியாகவே வாழ்கின்றனர். எனினும் உய்கர் இன மக்களில் ஒரு சிறு பிரிவினரை உள்நாட்டு/வெளி நாட்டு சக்திகள் சீன அரசுக்கு எதிராக தூண்டிவிடுகின்றனர். சீனாவின் மொத்த மக்கள் தொகையில் உய்கர் மக்கள் எண்ணிக்கை 0.7 சதவீதம் மட்டுமே! அதாவது சுமார் 1 கோடி!

மத அடிப்படையிலான பிரிவினைவாதிகளும் பயங்கரவாதிகளும் உய்கர் இன மக்களை அணிதிரட்ட சில வரலாற்று பொய்களை கட்டமைக்கின்றனர். இந்தியாவில் எப்படி சங்பரிவாரத்தினர் முஸ்லிம்களுக்கு எதிராக வரலாற்றை திரித்துமுன்வைக்கின்றனரோ அப்படி சீனாவின் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் மற்ற இனத்தவருக்கு எதிராக வரலாற்றை பொய்கள் மூலம் கட்டமைக்கின்றனர். பிரிவினைவாதிகள் முன்வைக்கும் ஒரு பொய் என்னவெனில் ஷின்ஜியாங் பகுதி எப்பொழுதும் சீனாவின் ஒரு பகுதியாக இருந்தது இல்லை; எனவே அதனை தனி நாடாக பிரிக்க வேண்டும் என்பதுதான் இஸ்லாமிய பிரிவினைவாதிகள் கோருகின்றனர். ஆனால் உண்மை என்னவெனில் ஷின்ஜியாங் பகுதி பன்னெடுங்காலமாக சீனாவின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. சீனாவை ஆண்ட பல மன்னராட்சிகளின் கீழ் ஷின்ஜியாங் பகுதியும் இருந்தது என்பதற்கு பல வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

பிரிவினைவாதிகள் முன்வைக்கும் இன்னொரு பொய், ஷின்ஜியாங் பகுதியில் வாழும் உய்கர் இன மக்கள் துருக்கியினத்தவரின் வம்சாவளியினர் எனவும் அவர்கள் மட்டுமே இந்த பகுதியின் மண்ணின் மைந்தர்கள் எனவும் மற்றவர்கள் அனைவரும் சமீபத்திய வந்தேறிகள் எனவும் கூறுகின்றனர். எனவேதான் ஷின்ஜியாங் பகுதியை கிழக்கு துர்கிஸ்தானாக மாற்ற இவர்கள் துடிக்கின்றனர். ஆனால், உய்கர் இன மக்களின் உண்மையான மூதாதையர் துருக்கி இனத்தவர் அல்ல;அவர்களின் மூதாதையர் 5ம் நூற்றாண்டுகளில் மங்கோலியாவில் வாழ்ந்தவர்கள் என்பதற்கு அகழாய்வு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. ஷின்ஜியாங் பகுதி பல்வேறு சாம்ராஜ்யங் களின் கீழ் ஆளப்பட்டதால் பல இனங்களை சேர்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அங்கு குடியேறினர். மிக நீண்ட காலம் நடந்தேறிய - மனிதர்களின் புலம் பெயர்வால் - பல்வேறு மக்களின் இனக்கலப்பும் உருவானது. 19ம் நூற்றாண்டில் அங்கு குறைந்தபட்சம் உய்கர்/ ஹான்/ கஜக் / மங்கோலிய/ உஹி/ கிர்ஜிக்/ மன்சூ/ சைப்/ தஜிக்/ தவோர்/ உஸ்பெக்/தாத்தர்/ரஷ்ய ஆகிய13 இனங்களின் மக்கள் வாழ்ந்து வந்தனர். இதில் உய்கர் மக்களின் எண்ணிக்கை அதிகம். எனினும் கணிசமாக மற்ற இனத்து மக்களும் பலநூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் பகுதியாகவே ஷின்ஜியாங்உள்ளது. 
ஷின்ஜியாங் பகுதியில் இஸ்லாம் மட்டுமே ஒரே மதமாக இருந்தது என்பதும் மதவாதிகளின் கூற்று. ஆனால் உண்மைஎன்ன? உலகின் பல பகுதிகளில் இருந்ததைப் போலவே ஷின்ஜியாங் பகுதியிலும் தொடக்கத்தில் மந்திரம்/சூனியம் அடிப்படையிலான வழிபாடு இருந்தது. ஷின்ஜியாங் ‘சில்க்ரோடு’ எனப்படும் பட்டுப்பாதையில் இருந்ததால் கிழக்கு மற்றும்மேற்கு பகுதியிலிருந்து பலர் வருகை புரிந்தனர். அதன் விளைவாக பார்சி/ பவுத்தம்/ மனிசேயிசம்/ நெஸ்ட்ரோயினசம்/டாவோயிசம் போன்ற பல மதப்பிரிவுகள் மக்களிடம் செல்வாக்கு பெறலாயின. 10ம் நூற்றாண்டில் இஸ்லாமும் 18ம் நூற்றாண்டில் கிறித்துவமும் வந்தன. ஒரு கட்டத்தில் ஷின்ஜியாங்கின் வட பகுதியில் இஸ்லாமும் தென் பகுதியில் பவுத்தமும் வலுவாக கோலோச்சின. அதே சமயத்தில் வேறு பல மதப்பிரிவுகளும் இருந்தன.

ஷியான்ஜிங் பகுதி ஒரே இனம்/ஒரே மதம் என மதவாதிகள்சொல்வதற்கு காரணம் அந்த பகுதியின் செழுமையான பன் முகத்தன்மையை சீர்குலைப்பது என்பதாகும். தமது மதவாத நோக்கத்தை நிறைவேற்ற இந்த பன்முகத்தன்மையை சீர்குலைப்பது அவசியம் என அவர்கள் கருதுகின்றனர். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே ஷின்ஜியாங் பகுதியில் “கிழக்கு துர்கிஸ்தான்” எனும் இஸ்லாமிய தேசம்அமைக்கப்பட வேண்டும் எனவும் மற்ற அனைத்து இனத்தவரையும் துரத்த வேண்டும் எனவும் பிரிவினைவாத இயக்கம் கூறி வந்தது. குறிப்பாக சவூதி அரசாங்கம் வஹாபிசம் எனப்படும் பிற்போக்குத்தனமான அடிப்படைவாதத்தை பல தேசங்களில் பரப்ப எடுத்த முயற்சிகளின் பின்னணியில் ஷின்ஜியாங் பகுதியிலும் இந்த கோட்பாடு தலையெடுத்தது. 1933 மற்றும் 1944ம் ஆண்டுகளில் இரண்டு முறை கிழக்குதுர்கிஸ்தான் குடியரசு அமைக்கப்பட்டதாகக் கூட பிரிவினைவாதிகள் தடாலடியாக அறிவித்தனர். ஆனால் மக்களின் ஆதரவு இல்லாததால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது.
1949ம் ஆண்டு சீனப் புரட்சி வெற்றி பெற்றது. 1955ம் ஆண்டு ஒன்றுபட்ட சீனாவின் கீழ் ஷின்ஜியாங் பகுதி சுயாட்சி பெற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்டது. சுயாட்சி பிரதேசம் எனில் என்ன பொருள்? சிறுபான்மை மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதிகளில் சமூக/அரசியல் ஆளுமை அதிகாரங்கள் அனைத்தும் அந்த மக்களிடமே இருக்க வேண்டும்என்பதே இதன் பொருளாகும். சீனப்புரட்சிக்கு பிறகும் பிரிவினைவாதிகள் அவ்வப்பொழுது கலகங்களில் ஈடுபட்டுவந்தனர். அமெரிக்கா போன்ற சோசலிச எதிரிகளும் இந்த பிரிவினைவாதிகளுக்கு உதவினர். 

சீனாவில் பயங்கரவாத தாக்குதல்கள்
1990களில் குறிப்பாக அமெரிக்க இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு பிறகு ஷின்ஜியாங் பகுதியிலும் இஸ்லாமிய தேசம் அமைக்க “ஜிகாத்” எனும் புனிதப் போருக்கு அறைகூவல் விடப்பட்டது. இதற்கு பின்னர் ஏராளமான பயங்கரவாத தாக்குதல்கள் ஷின்ஜியாங் பகுதியிலும் பெய்ஜிங் உட்பட பல இடங்களிலும் நடத்தப்பட்டன. 

சீனாவில் 1990களுக்கு பின்னர் பயங்கரவாதிகள் நடத்தியசில முக்கிய தாக்குதல்கள்:

*    5.2.1992 - இரு பேருந்துகளில் குண்டு வெடிப்பு- மூவர் மரணம்/ 53 பேர்படுகாயம்.

*    25.2.1997 - மூன்று பேருந்துகளில் குண்டு வெடிப்பு- 9 பேர் மரணம்/ 68 பேர் படுகாயம்.

*    4.8.2008 - பயங்கரவாதிகள் ஒரு லாரியை திருடி பயிற்சியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது ஏற்றினர். 16 பேர் மரணம்/16 பேர் படுகாயம்.

*    5.7.2009- பயங்கரவாதிகளின் மிகப்பெரிய படை, கலவரத்தை தூண்டியது- 197 பேர் படுகொலை/1700 பேர் படுகாயம். மேலும் 332 பெரிய அங்காடிகள் தீக்கிரை- 1325 வாகனங்கள் எரித்து சாம்பல்.

*    30.7.2011- லாரி கடத்தல்- அந்த லாரியை மக்கள் திரளுக்குள் விடுதல்- பின்னர் கத்திக்குத்துகள்- 9 பேர் மரணம்/27 பேர் படுகாயம். 

*    31.7.2011- சில பயங்கரவாதிகள் திடீரென சாலைகளில் நடந்து சென்று கொண்டிருந்த மக்கள் மீது கத்திகுத்து தாக்குதலில் ஈடுபட்டனர்- 6 பேர் மரணம்/15 பேர் படுகாயம்.

*    28.2.2012 – 9 பயங்கரவாதிகள் கத்திகளுடன் மக்கள் கூட்டத்தில் பாய்ந்து தாக்கினர்- 9 பேர் மரணம்/ 20 பேர் படுகாயம்.

*    23.4.2013 - பயங்கரவாதிகள் ஆயுதங்களை தயாரித்து கொண்டிருந்ததை பார்த்துவிட்ட இருவர் படுகொலை. அவர்களை காப்பாற்ற வந்த காவலர்கள் 15 பேர் படுகொலை/31 பேர் படுகாயம்.

*    26.6.2013 - காவலர்கள் மீது தாக்குதல்- 24 பேர் படுகொலை/26 பேர் படுகாயம்.

*    18.10.2013 - 5 பயங்கரவாதிகள் பெய்ஜிங்க் தியானென்மென் சதுக்கத்தில் இரண்டு ஜீப்களில் 31 பேரல் பெட்ரோலுடன் மக்களிடையே பாய்ந்தனர். பாதுகாப்பு படையினரின் விழிப்புணர்வால் அவர்கள் சதி தடுக்கப் பட்டது. எனினும் ஒரு வெளிநாட்டு பயணி உட்பட 2 பேர் இறந்தனர். 41 பேர் காயமடைந்தனர். தியானென்மென் சதுக்கம் தாக்குதல் என்பது சீன அரசுக்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.

*    1.3.2014 - 8 பயங்கரவாதிகள் கத்திகளுடன் ரயில்வே நிலையத்தில் மக்களை தாக்கினர்- 31 பேர் மரணம்/141 பேர் படுகாயம்.

*    22.5.2014 - 5 பயங்கரவாதிகள் இரண்டு பெரிய கார்களைமக்கள் கூட்டத்தில் வேகமாக விட்டனர்- 39 பேர் மரணம்/94 பேர் படுகாயம். 

*    28.7.2014 - கத்தி மற்றும் கோடாரிகளுடன் அரசு அலுவலகங்களில் புகுந்து தாக்குதல்- 37 பேர் படுகொலை/13 பேர் படுகாயம்.

*    21.9.2014 - விவசாயிகள் சந்தையில் தாக்குதல்- 10 பேர் படுகொலை/57 பேர் படுகாயம்.

*    18.9.2015- பயங்கரவாதிகள் நிலக்கரி சுரங்கத்தை தாக்கினர்- 16 பேர் மரணம்/18 பேர் படுகாயம்.

*    1996 முதல் 2012 வரை பயங்கரவாதத்தை எதிர்த்து குரல்கொடுத்த குறைந்தபட்சம் 6 முக்கிய இஸ்லாமிய மவுல்விக்கள் மற்றும் சீன இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 

*    இரண்டு முறை பயங்கரவாதிகள் விமானங்களை கடத்த முயன்றனர். அமெரிக்காவில் இரட்டை கோபுரங்களை தகர்த்தது போல சீனாவிலும் திட்டமிடப்பட்டது.

சீன அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு எதிராக எடுத்த கடும் நடவடிக்கைகள் காரணமாக...

*    1588 பயங்கரவாத குழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு கலைக்கப்பட்டன.

*    12,995 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

*    2052 வெடிகுண்டு மற்றும் ஏனைய பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

*    3,45,229 சட்ட விரோத மதவாத பிரசுரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவ்வளவு ஆழமான, பரவலான அளவில் பல உயிர் களை பறிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்காமல் எந்த அரசாவது இருக்க இயலுமா? 

இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டவுடன் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. சார்லோ ஹெப்டோ எனும்பத்திரிக்கை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பொழுதுபிரான்ஸ் அரசாங்கம் எதிர் நடவடிக்கைகளை எடுத்தது. லண்டன் வீதிகளில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பொழுது பிரிட்டன் அரசாங்கம் கடும் நடவடிக்கைகளை எடுத்தது. ஆனால் சீனா அரசாங்கம் எதிர் நடவடிக்கைகள் எடுக்கும் பொழுது அவதூறு பிரச்சாரம் நடத்தப்படுகிறது.

சித்ரவதைக் கூடமா? பயிற்சிக் கூடமா?
சீன அரசாங்கம் பயங்கரவாத்தை எதிர்த்து நடவடிக்கைகளை எடுத்த பொழுது ஒரு அடிப்படைக் கோட்பாட்டில் தெளிவாக இருந்தது. பயங்கரவாதத்துக்கு மதம்/இனம்/மொழி என்பது இல்லை. இஸ்லாத்தின் பெயரில் பயங்கரவாதிகள் செயல்பட்டாலும் இஸ்லாம் பயங்கரவாத மதம் அல்ல; மாறாகஅது அமைதியை போற்றும் மதங்களில் ஒன்று என்பதில் சீனாதெளிவாக இருந்தது. இரட்டை கோபுரத்தை பின்லேடன் தகர்த்த பொழுது “இனி போர் என்பது கிறித்துவ நாகரிகத்துக் கும் இஸ்லாம் நாகரிகத்துக்கும் நடக்கும்” என அன்றைய அமெரிக்கா ஜனாதிபதி புஷ் கொக்கரித்தார். ஆனால் சீனாஅப்படி பிரச்சனையை அணுகவில்லை. ஒரு சில பயங்கரவாதிகளின் செயலுக்காக அவர்கள் சார்ந்த மதத்தை காரணியாக்குவது தவறு என்பதில் சீனா அரசாங்கம் தெளிவாக இருந்தது.பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்களை சீனா அரசாங்கம் மூன்று வகைகளாக பிரித்தது:

1.    பயங்கரவாதத்துக்கு மூளையாக செயல்பட்டவர்கள்/திட்டமிட்டு கொலை/கொள்ளையில் ஈடுபட்டவர்கள்/தாங்கள் செய்தது தவறு என ஏற்றுக்கொள்ளாதவர்கள்.

2.    உணர்வுப்பூர்வமாக பயங்கரவாத செயலில் ஈடுபட்டாலும் அவர்களின் செயல்கள் கடுமையான விளைவுகளை உருவாக்கவில்லை. தமது தவறை ஏற்று கொண்டவர்கள்.

3.    பயமுறுத்தல் அல்லது நிர்ப்பந்தங்களின் காரணமாக பயங்கரவாதிகளுடன் இணைந்தவர்கள்- தமது தவறை உணர்ந்து ஏற்று கொண்டவர்கள்.

முதல் பிரிவினரை சீன அரசாங்கம் தனது தேசத்தின் சட்டங்களுக்கு உட்பட்டு கடுமையாக தண்டித்தது. இரண்டுமற்றும் மூன்றாவது பிரிவினரை பயங்கரவாத சிந்தனைகளிலிருந்து வென்றெடுக்க இயலும் எனும் அடிப்படையில் அவர்களுக்கு மறுகல்வி மற்றும் மறுவாழ்வுக்கான பயிற்சிகளை தருவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக பல பயிற்சிமையங்கள் உருவாக்கப்பட்டன. அந்த பயிற்சி மையங்களில் கீழ்கண்ட கல்வி கொடுக்கப்பட்டது:

$    சீனாவின் சட்டங்கள் குறித்து விளக்கங்கள்

$    பயங்கரவாதம் ஏன் மனித குலத்துக்கு விரோதமானது எனும் விளக்கங்கள்

$    இஸ்லாம் ஏன் அமைதியை விரும்புகிறது என்பதற்கான விரிவுரைகள்

$    சீன மொழி

$    ஒவ்வொரு தனி நபரும் விரும்பும் ஏதாவது ஒரு தொழில் கல்வி.

இந்த பயிற்சி மையங்கள் பாதுகாக்கப்பட்டவை. எவரும் அனுமதி இல்லாமல் உள்ளேயும் வர இயலாது; வெளியேயும் போக இயலாது. ஆனால் அந்த பயிற்சி மையத்துக்குள் விளையாட்டு மைதானங்கள்/நீச்சல் குளங்கள்/பொழுது போக்கு அம்சங்கள் என அனைத்து வசதிகளும் இருந்தன. சில குறிப்பிட்ட நாட்களில் உறவினர்கள் வந்து சந்திக்கும் வசதிகளும் செய்யப்பட்டன. மையத்தில் இருப்பவர்களின் பயிற்சி திருப்திகரமாக இருந்தால் அவர்கள் வீடுகளுக்கு சென்று வரவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த பயிற்சி மையங்களைத் தான் சித்ரவதைக் கூடங்கள்என அமெரிக்க ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றன. இதைப் போன்ற பயிற்சி மையங்கள் மலேசியா/ பிரான்ஸ்/ இங்கிலாந்து/ நார்வே ஆகிய தேசங்களிலும் உள்ளன. பயங்கரவாதம் பக்கம் சாய்ந்த - ஆனால் தம்மை திருத்தி கொள்ள நினைப்பவர்களுக்கு அதற்கான சூழலை உருவாக்குவது என்பதுதான் இந்த பயிற்சி மையங்களின் முக்கியநோக்கம். ஐ.நா.சபையின் “பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் வழிகாட்டுதல் எண் 60/288” வழியில்தான் இவை செயல்படுத்தப்படுகின்றன. மலேசியா/ பிரான்ஸ்/ இங்கிலாந்து/நார்வே ஆகிய தேசங்களை விமர்சிக்காத ஊடகங்கள் சீனாவை மட்டும் அவதூறு செய்வது உள்நோக்கம் கொண்டது என்பது கூறத்தேவை இல்லை.

இஸ்லாம் அழிக்கப்படுகிறதா? 
உய்கர் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்றனர் என ஊடகங்கள் அவதூறு கிளப்புகின்றன. ஆனால் உண்மையில் இந்த காலத்தில் உய்கர் முஸ்லிம் களின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது. 1978ம் ஆண்டு அமலாக்கப்பட்ட “ஒரு குடும்பம்; ஒரு குழந்தை” எனும் கொள்கையிலிருந்து உய்கர் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. 2018 வரை இந்த விலக்கு இருந்தது. இப்பொழுது மூன்று குழந்தைகள் வரை பெறலாம் என புதிய கொள்கை தேசம் முழுமைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2010-2018ம் ஆண்டுகளுக்கு இடையேசீனாவின் முக்கிய இனமான ஹான் மக்களின் எண்ணிக்கை 2 சதவீதம் அதிகரித்தது. ஆனால் உய்கர் இனத்தின் மக்கள்தொகை 25 சதவீதம் அதிகரித்தது. இது எப்படி இனப்படுகொலையாக இருக்க இயலும்?

ஷின்ஜியாங் பகுதியில் ஏராளமான மசூதிகள் இடிக்கப்படுகின்றன என பொய் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் உண்மை என்ன? 

ஷின்ஜியாங் பகுதியில்...

$    24,000 மசூதிகள் உள்ளன. 

$    29,000 இமாம்கள் மற்றும் ஏனைய மத தலைவர்கள் உள்ளனர். 

$    புகழ் பெற்ற கஷ்கார் ஈத்கா மசூதி உட்பட 109 இஸ்லாமிய மத பழங்கால கட்டிடங்கள் தொன்மை வாய்ந்தவை என வகைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. 

$    ஒரு ஆண்டுக்கு சராசரியாக 10,000 முதல் 14,000 சீன முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை செல்ல அரசு நிதி உதவியுடன் அனுமதிக்கப்படுகின்றனர். 

$    திரு குர்-ஆன் 17.6 லட்சம் பிரதிகள் அச்சிட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 

$    112 இஸ்லாமிய மத அமைப்புகள் உள்ளன. அவை அனைத்தும் சீன அரசாங்கத்தின் நிதி உதவி பெறுகின்றன. 

ஷின்ஜியாங் பகுதி குறித்து அமெரிக்கா எழுப்பி வரும் பிரச்சனைகளை ஆதரிக்கும் 22 தேசங்களும் நேட்டோ அமைப்பு உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்கள் எவரும் அந்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய தயாராக இல்லை. கம்யூனிச எதிர்ப்பு அவர்களது கண்களை மறைக்கிறது. அதே சமயத்தில் ஷின்ஜியாங் பகுதியில் இனப்படுகொலை நடக்கவில்லை என 37 தேசங்கள் சீனாவை ஆதரித்து அறிக்கை விட்டுள்ளன. இதில் அல்ஜீரியா/பஹ்ரைன்/எகிப்து/குவைத்/ ஓமன்/ பாகிஸ்தான்/ கத்தார்/சவூதி அரேபியா/ஐக்கியஅரபு அமீரகம் ஆகிய முஸ்லிம் தேசங்களும் அடங்கும். சீனாவின் அழைப்பின் பெயரில் பல தேசங்களின் பிரதிநிதிகள் ஷின்ஜியாங் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அமெரிக்காவின் அவதூறில் எவ்வித உண்மையும் இல்லை என்பதே அவர்களது மதிப்பீடு. 

2019ம் ஆண்டு கூடிய இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சீனா குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில் அங்கு நமது தூதுக்குழு சென்று வந்தது. சீனாவில் முஸ்லிம் குடிமக்கள் அக்கறையுடன் கவனிக்கப்படுவதை இந்த அமைப்புபாராட்டுகிறது. நமது அமைப்புக்கும் சீன மக்கள் குடியரசுக்கும்இடையே மேலும் ஒத்துழைப்பு வலுப்படும் என நம்புகிறது.”

ஷின்ஜியாங்கில் பொருளாதார வளர்ச்சி
பயங்கரவாதத்தை அகற்ற கடுமையான நிர்வாக நடவடிக்கைகள் தேவை. ஆனால் அவை மட்டுமே போதாது.

வலுவான பொருளாதார வளர்ச்சியும் மக்கள் வாழ்வில் உருவாக்கப்படும் முன்னேற்றங்களும்தான் பயங்கரவாதத்தை தனிமைப்படுத்தும் என்பதை சீன அரசாங்கம் உணர்ந்திருந்தது. எனவே ஷின்ஜியாங் பகுதியில் விரைவான பொருளாதார வளர்ச்சிக்கு ஏராளமான முதலீடுகளை சீன அரசாங்கம் செய்தது. அந்த பகுதியில் 21 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு சராசரியாக 3 கோடி பயணிகள் விமான நிலையங்களில் வந்து செல்கின்றனர். பல புல்லட் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஷியான்ஜிங்க் பகுதியின் நகரங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. 

கடந்த சில ஆண்டுகளில் 30 லட்சம் உய்கர் மக்கள்வறுமை கோட்டுக்கு வெளியே கொண்டு வரப்பட்டனர். ஷின்ஜியாங் பகுதியில் வறுமை முற்றிலும் அகற்றப்பட்டுள் ளது. கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிகள் மற்றும் கல்வி நிலையங்களுக்காக 1.2 பில்லியன் டாலர்கள் அதாவது ரூ 9000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. உய்கர் இன மக்களுக்கு சிறு தொழில் தொடங்க வட்டியில்லா கடன் அளிக்கப்படுகிறது. ஷின்ஜியாங் பகுதியில் இயங்கும் நிறுவனங்கள் உய்கர் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மை இன ஊழியர்களை பணிக்கு அமர்த்த ஊக்கப்படுத்தப்படுகின்றன.

ஷின்ஜியாங் பகுதியில் கல்லூரி/வேலை வாய்ப்பு மற்றும் இராணுவ பணிகளில் உய்கர் முஸ்லிம்களுக்கு 60 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. உய்கர் இனத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் சீன இராணுவத்தில் பணி புரிகின்றனர். சீனாவின் ஏனைய பல்கலைக் கழகங்களில் சேரும் பொழுது பெரும்பான்மை ஹான் இன மாணவர்களைவிட 20 முதல் 30 சதவீதம் வரை மதிப்பெண்கள்குறைவாக பெற்றிருந்தாலும் உய்கர் முஸ்லிம் மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. நகர்ப்புறத்தில் 100 சதவீதமும் கிராமப்புறத்தில் 97 சதவீதம் பேரும் தொலைக்காட்சி வசதி பெற்றுள்ளனர். 2002ம் ஆண்டு 4,48,000 பேர் ஷின்ஜியாங் பகுதியில் இணையம் பயன்படுத்தினர். இந்த எண்ணிக்கை 2016 ஆம் ஆண்டு 1,29,60,000 ஆக உயர்ந்தது. பெண்களின் கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதன் பயனாக ஷின்ஜியாங் பகுதியில் அரசு ஊழியர்களில் 30 முதல் 35 சதவீதம் பெண்கள் உள்ளனர். 

சீன அரசாங்கத்தின் இந்த வளர்ச்சி நடவடிக்கைகள் காரணமாக பயங்கரவாத தாக்குதல்கள் பெருமளவு குறைந்துள்ளன. மிகப்பெரும்பான்மையான உய்கர் மற்றும் ஏனைய முஸ்லிம் பிரிவு மக்கள் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவும் உள்ளனர்.

ஏன் அமெரிக்காவின் இலக்கு ஷின்ஜியாங்?
பொருளாதாரம்/அறிவியல்/தொழில்நுட்பம் என அனைத்திலும் சீனா அமெரிக்காவுக்கு சவாலாக உள்ளது. சீனாவின் மிக முக்கிய பொருளாதார திட்டங்களில் ஒன்று“பெல்ட் ரோடு” என்பதாகும். பழைய பட்டுப் பாதை அடிப்படையில் உருவாகும் இந்த திட்டம் உலகின் பல தேசங்களை இணைக்கிறது. இந்த திட்டம் சீனாவுக்கு மட்டுமல்ல; இதில் இணையும் அனைத்து தேசங்களுக்கும் நன்மை பயக்க கூடியது. எனவே பல தேசங்கள் இதில் இணைந்துள்ளன. இதற்கு இணையான ஒரு பொருளாதார திட்டத்தை உருவாக்க அமெரிக்காவால் இயலவில்லை. 

இந்த திட்டத்தின் முக்கிய பூகோள இணைப்பு ஷின்ஜியாங்பகுதி ஆகும். இதன் வழியாகத்தான் பல முக்கிய ரயில் பாதைகள் செல்கின்றன. 2020ம் ஆண்டு ஐரோப்பாவுக்கு மட்டும்ஷின்ஜியாங் வழியாக 9600 சரக்கு ரயில்கள் பயணித்துள் ளன. அதே போல ஈரான் போன்ற மத்திய ஆசிய தேசங்களிலிருந்து பல எரிசக்தி குழாய்கள் சீனாவின் உட்பகுதிகளுக்கு ஷின்ஜியாங் வழியாகத்தான் செல்கின்றன. எனவே ஷின்ஜியாங் பகுதியில் பதற்றத்தையும் உறுதியற்ற தன்மையையும் உருவாக்கினால் அது சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். அதனால்தான் இந்த பகுதியை அமெரிக்கா திட்டமிட்டு தேர்ந்தெடுத்துள் ளது. ஆகவே ஷின்ஜியாங் பிரச்சனையை கிளப்பும் அமெரிக்காவின் செயல் முற்றிலும் அதன் பொருளாதார சுயநலனை அடிப்படையாக கொண்டது ஆகும்.

சீனாவுக்கு புதிய சவால்
1998ம் ஆண்டு பின்லேடன் உதவியுடன் ஷின்ஜியாங் பகுதியை சீனாவிலிருந்து துண்டாட “கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்” (East Turkistan Islamic Movement) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை 2002ம் ஆண்டு ஐ.நா. சபை அல்கொய்தாவுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்பு என அறிவித்தது. ஆனால் டிரம்ப் நிர்வாகம் 2020ம் ஆண்டு இந்த அமைப்பை பயங்கரவாத பட்டியலிலிருந்து நீக்கியது மட்டுமல்ல; நிதி உதவியும் செய்தது. பைடன் நிர்வாகமும் இதனை தொடர்கிறது. “உலக உய்கர் காங்கிரஸ்” எனும் அமைப்பு அமெரிக்க உதவியுடன் தொடங்கப்பட்டுள்ளது. 2004ம் ஆண்டிலிருந்தே இந்த அமைப்புக்கு நிதி உதவி செய்து வருவதாக அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்துள்ளது. சீனாவுக்கு எதிராக ஒருபுறம் பிரிவினைவாதத்தையும் மறுபுறம் பயங்கரவாதத்தையும் அமெரிக்கா ஆதரித்து வருகிறது.

அமெரிக்காவுக்கு புதிதாக முஸ்லிம்கள் மீது பாசம்பொங்கிவழிகிறது. அமெரிக்காவின் போர்கள் காரணமாகஉலகின் பல பகுதிகளில் சுமார் 2.7 கோடி முஸ்லிம்கள் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே மிகக் கொடூரமான சிறைகளான அபுகாரிப் மற்றும் குவாண்டனாமோ ஆகியவற்றை உருவாக்கி முஸ்லிம்களை சிறைப்படுத்திய அமெரிக்காவுக்கு சீனமுஸ்லிம்கள் மீது திடீர் பாசம் என்பது விந்தையாக இல்லையா?இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தவறான நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் தலிபான் ஆட்சி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. உய்கர் பயங்கரவாதிகளுக்கு இது மேலும் ஊக்கத்தை கொடுக்கும்! எனினும் சீனா சில எதிர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சீனாவுக்குஎதிராக பயங்கரவாத செயல்களை தங்களது ஆட்சி ஆதரிக்காது என தலிபான்களின் ஒரு பிரிவினர் கூறியுள்ளனர். இது நீடிக்குமா என்பது காலம்தான் பதில் சொல்லும். எனினும் சீனா தனது செயல்கள் மூலம் அமெரிக்கா மற்றும் ஏனைய முதலாளித்துவ தேசங்களின் சூழ்ச்சியை முறி
யடிக்கும் என நம்பலாம். ஏனெனில் நியாயம் மட்டுமல்ல; ஷின்ஜியாங் மக்களும் சீனாவின் பக்கம் உள்ளனர். 

கட்டுரையாளர் : அ.அன்வர் உசேன்

;